tamilnadu

img

இபிஎஃப் வட்டி 8.65 சதவீதமாக உயர்வு!

கடந்த 2018-19 ஆம் ஆண்டுக்கான இபிஎஃப் வட்டி 8.65 சதவீதமாக உயர்த்தி வழங்க மத்திய நிதியமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதத்தில், மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் காங்வார் தலைமையிலான அறக்கட்டளை உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்றது. அதில் நிதியமைச்சக அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் 2018-19ஆம் ஆண்டுக்கான வட்டி விகிதத்தை 8.65 சதவீதம் உயர்த்துவது குறித்து முடிவெடுக்கப்பட்டது.

மத்திய நிதியமைச்சகமும் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு, 2018-19ஆம் ஆண்டுக்கான வட்டி விகிதத்தை உயர்த்த தற்போது ஒப்புக்கொண்டுள்ளது. இதுவே கடந்த மூன்று ஆண்டுகளில் அதிகபட்ச வட்டி விகிதமாகும். கடந்த 2017-18ஆம் ஆண்டுக்கான வட்டி விகிதம் 8.55 சதவீதம், இதுவே கடந்த 5 ஆண்டுகளில் குறைந்தபட்ச வட்டி விகிதமாகும். மேலும், 2016-17 ஆம் ஆண்டுக்கான வட்டி விகிதம் 8.65 சதவீதமும், 2015-16 ஆண்டுக்கான வட்டி விகிதம் 8.8 சதவீதமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய நிதியமைச்சகத்தின் வட்டி உயர்வு குறித்து வருமான வரித்துறையும் மத்திய தொழிலாளர் நலத்துறையும் 2018-19ஆம் ஆண்டுக்கான வட்டி விகித அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதேபோல், இபிஎஃப்ஓ அமைப்பும் நாடு முழுவதும் உள்ள இபிஎஃப்ஓ கிளை அலுவலகங்களுக்கும் வட்டி விகித உயர்வு பற்றி தெரிவித்து இபிஎஃப்ஓ சந்தாதாரர்களின் கணக்கில் 2018-19ஆம் ஆண்டுக்கான வட்டித் தொகையை வரவு வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

தற்போது அறிவித்துள்ள 8.65 சதவிகித வட்டி அளித்தது போக, இபிஎஃப்ஓ அமைப்பில் உபரியாக மட்டுமே ரூ.151.67 கோடி வரை இருக்கும் என்று இபிஎஃப்ஓ மதிப்பீடு செய்துள்ளது.


;